ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, April 6, 2023

தாய் தந்தை அகவல்


அன்னையின் மலரடி போற்றி போற்றி

தந்தையின் திருவடி போற்றி போற்றி

என்னைச் சுமந்தோரே போற்றி போற்றி

எந்தையாய் இருந்தோரே போற்றி போற்றி


கருவாக ஆக்கினீர் போற்றி போற்றி

உருவாக ஆக்கினீர் போற்றி போற்றி

கர்ப்பத்தில் தாங்கினீர் போற்றி போற்றி

பொற்பதம் பணிகிறேன் போற்றி போற்றி


வயிற்றினுள் காத்தீரே போற்றி போற்றி

வையகம் அளந்தீரே போற்றி போற்றி

உயிருதிரம் தந்தீரே போற்றி போற்றி

உயிர்பணயம் வைத்தீரே போற்றி போற்றி


பத்தியம் காத்தீரே போற்றி போற்றி

சத்தியத் தாயானீர் போற்றி போற்றி

சதைகீறி ஈன்றீரே போற்றி போற்றி

விதையினை தந்தீரே போற்றி போற்றி


உத்தமித் தாயேநீ போற்றி போற்றி

உதிரத்தைத் தந்தவரே போற்றி போற்றி

வித்தகத் தந்தையே போற்றி போற்றி

சித்தத்தை தந்தவரே போற்றி போற்றி


தாய்ப்பாலைத் தந்தவரே போற்றி போற்றி

தாயேஉன் மலர்மடி போற்றி போற்றி

சேயெனக் கொஞ்சினீர் போற்றி போற்றி

தூயவரின் திண்தோளே போற்றி போற்றி


குழவியெனைக் காத்தீரே போற்றி போற்றி

அழகென மகிழ்ந்தீரே போற்றி போற்றி

உலகத்தைக் காட்டினீர் போற்றி போற்றி

உலாப்போக வைத்தீரே போற்றி போற்றி


தாய்மொழி தந்தீரே போற்றி போற்றி

தாய்வழி உறவுகள் போற்றி போற்றி

சிந்தைமொழி தந்தீரே போற்றி போற்றி

தந்தைவழி உறவுகள் போற்றி போற்றி


நடைபயில வைத்தீரே போற்றி போற்றி

கடைகண்ணேறு கழித்தீரே போற்றி போற்றி

அடைமழையில் வாழ்ந்தீரே போற்றி போற்றி

குடைகொண்டு காத்தீரே போற்றி போற்றி


துள்ளிவிளை யாடவைத்தீர் போற்றி போற்றி

எள்ளிநகை யாடவைத்தீர் போற்றி போற்றி

பள்ளிக்கு போகவைத்தீர் போற்றி போற்றி

பலகலைகள் பயிற்றுவித்தீர் போற்றி போற்றி


மனிதராய் ஆக்கினீர் போற்றி போற்றி

புனிதராய் வாழ்ந்தீரே போற்றி போற்றி

மண்ணுலகம் சென்றீரே போற்றி போற்றி

உன்பாதம் பணிகிறேன் போற்றி போற்றி


வாழவைத்த எம்தாயே போற்றி போற்றி

வள்ளியம்மா உன்நாமம் போற்றி போற்றி

தோகைமயில் தந்தையே போற்றி போற்றி

மோகன்ராஜி உன்நாமம் போற்றி போற்றி


எனைபடைத்த தெய்வங்களே போற்றி போற்றி

என்னோடிருக்க வேண்டும் போற்றி போற்றி

விண்காற்றில் கலந்தீரே போற்றி போற்றி

எனைக்காப்பீர் எந்தைகளே போற்றி போற்றி!


உங்களின் மகன்

மோ.கணேசன்

No comments: