ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 24, 2015

வெள்ளத்தால் வீழ்ந்து சாகிறோம்


ஒற்றையாளாய்
ஊரின் எல்லையில்
கம்பீரமாய்  நின்று
ஊரைக்காக்கும்
எல்லைச்சாமி..!

ஊருலகம்
நீர் நிறைவாய் வாழ
ஒற்றைக் காலில்
தவம் கிடக்கும்
முனிவன்..!

கரும்பாசிகள்
கயல்கள்
கரு நண்டுகள்
என நீராதாரம் காக்கும்
கடவுள்..!

ஊருணி நிறைய
உழைக்கும்
விவசாயிகள் மகிழ
உயிர் நீர் காக்கும்
உத்தமன்!

ஆபத்து காலங்களில்
இரும்பென நின்று
இடர்தனை
நீக்கும்
பெரும் கரும்பன்..!

காவிரியே ஆனாலும்
கல்லணையே ஆனாலும்
கரும் வைரமாய்
தாங்கி நிற்கும்
கம்பீரன்

காகம், குருவிகளுக்கு
மட்டுமின்றி
மானிடத்திற்கும்
நன்மை பயக்கும்
அபயன்..!

இப்படி
எத்தனை வகையில்
எடுத்துச் சொல்லினும்
உன் சிறப்புகளை
வரிகளில் அடக்கமுடியவில்லை..!

கரைகளை கவ்விப்
பிடித்த உன் கருங்கரங்களை
கருணையின்றி
வெட்டி வீழ்த்தினோம்
கண்ட துண்டமாக்கினோம்

ஆக்கிரமிப்புகளால்
உனை அடியோடு வீழ்த்தினோம்…
இன்று வெள்ளத்தால்
வீழ்ந்து சாகிறோம்
பனை மரமே!

No comments: