ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, April 6, 2023

தாய் தந்தை அகவல்


அன்னையின் மலரடி போற்றி போற்றி

தந்தையின் திருவடி போற்றி போற்றி

என்னைச் சுமந்தோரே போற்றி போற்றி

எந்தையாய் இருந்தோரே போற்றி போற்றி


கருவாக ஆக்கினீர் போற்றி போற்றி

உருவாக ஆக்கினீர் போற்றி போற்றி

கர்ப்பத்தில் தாங்கினீர் போற்றி போற்றி

பொற்பதம் பணிகிறேன் போற்றி போற்றி


வயிற்றினுள் காத்தீரே போற்றி போற்றி

வையகம் அளந்தீரே போற்றி போற்றி

உயிருதிரம் தந்தீரே போற்றி போற்றி

உயிர்பணயம் வைத்தீரே போற்றி போற்றி


பத்தியம் காத்தீரே போற்றி போற்றி

சத்தியத் தாயானீர் போற்றி போற்றி

சதைகீறி ஈன்றீரே போற்றி போற்றி

விதையினை தந்தீரே போற்றி போற்றி


உத்தமித் தாயேநீ போற்றி போற்றி

உதிரத்தைத் தந்தவரே போற்றி போற்றி

வித்தகத் தந்தையே போற்றி போற்றி

சித்தத்தை தந்தவரே போற்றி போற்றி


தாய்ப்பாலைத் தந்தவரே போற்றி போற்றி

தாயேஉன் மலர்மடி போற்றி போற்றி

சேயெனக் கொஞ்சினீர் போற்றி போற்றி

தூயவரின் திண்தோளே போற்றி போற்றி


குழவியெனைக் காத்தீரே போற்றி போற்றி

அழகென மகிழ்ந்தீரே போற்றி போற்றி

உலகத்தைக் காட்டினீர் போற்றி போற்றி

உலாப்போக வைத்தீரே போற்றி போற்றி


தாய்மொழி தந்தீரே போற்றி போற்றி

தாய்வழி உறவுகள் போற்றி போற்றி

சிந்தைமொழி தந்தீரே போற்றி போற்றி

தந்தைவழி உறவுகள் போற்றி போற்றி


நடைபயில வைத்தீரே போற்றி போற்றி

கடைகண்ணேறு கழித்தீரே போற்றி போற்றி

அடைமழையில் வாழ்ந்தீரே போற்றி போற்றி

குடைகொண்டு காத்தீரே போற்றி போற்றி


துள்ளிவிளை யாடவைத்தீர் போற்றி போற்றி

எள்ளிநகை யாடவைத்தீர் போற்றி போற்றி

பள்ளிக்கு போகவைத்தீர் போற்றி போற்றி

பலகலைகள் பயிற்றுவித்தீர் போற்றி போற்றி


மனிதராய் ஆக்கினீர் போற்றி போற்றி

புனிதராய் வாழ்ந்தீரே போற்றி போற்றி

மண்ணுலகம் சென்றீரே போற்றி போற்றி

உன்பாதம் பணிகிறேன் போற்றி போற்றி


வாழவைத்த எம்தாயே போற்றி போற்றி

வள்ளியம்மா உன்நாமம் போற்றி போற்றி

தோகைமயில் தந்தையே போற்றி போற்றி

மோகன்ராஜி உன்நாமம் போற்றி போற்றி


எனைபடைத்த தெய்வங்களே போற்றி போற்றி

என்னோடிருக்க வேண்டும் போற்றி போற்றி

விண்காற்றில் கலந்தீரே போற்றி போற்றி

எனைக்காப்பீர் எந்தைகளே போற்றி போற்றி!


உங்களின் மகன்

மோ.கணேசன்





Sunday, June 19, 2022

சர்வதேச தந்தையர் தினக் கவிதை



அம்மா அடிக்க வருகையில்

வேட்டிக்குள் மறைய...

தூக்கம் வருகையில்

தோள் மீது உறங்க...

வீதி உலா போகையில்

விரல் பிடித்து நடக்க...

சகதோழர்களுக்கு இணையாக

சைக்கிள் பழக...

பள்ளிக்கு செல்லும்போது

பத்திரமாய் கொண்டு விட..

நீரூறும் பெருங்கிணற்றில்

நீச்சல் பழக...

அத்தனைக்கும் நீங்கள் தேவை

என்றன் தந்தையே...

அகவை எனக்கு நாற்பதாகினும்

அந்த சிறுபிராயம்

மீண்டும் வேண்டுகிறேன்...

உங்கள் மடியில்

மீண்டும் நான் துள்ளிவிளையாட!

காலனால் எனைப் பிரிந்து 

மண்ணில் புதைந்து

மறைந்தீர்களே நியாயமா?

மறுஜென்மத்தில்

நம்பிக்கையில்லாதவன்

தந்தையே உங்கள் மகன்!

நடவாதெனினும்

உங்கள் மகனாகப் பிறக்கவே

இன்னொரு ஜென்மம்

வேண்டுகிறேன் இயற்கையிடம்!

நிலவாய் மாறி வெளிச்சம் தந்தாலும்

நீங்கள் இல்லா இவ்வுலகம்

இருளாக இருக்கிறது அப்பா!

தாயில்லா பிள்ளையிவன்

என்றறிந்தும்

தந்தையில்லா பிள்ளையாக்கிய

காலமே என் 

தந்தையிடம் சொல்லிவிடு

எனது தந்தையர் தின வாழ்த்துகளை!





Wednesday, September 23, 2020

பேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? | how to made paper | vaalu t...





காகிதத்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை இந்த மூன்று நிமிட வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க... உங்க நட்பு வட்டத்துக்கும் அனுப்பி வையுங்க... கமெண்ட் பண்ணுங்க... வாலு டிவியை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணுங்க...



தொடர்ந்து இணைந்திருங்கள்... இது போன்ற பல்வேறு பொதுஅறிவு கேள்வி பதில்களோடு உங்களை சந்திக்க வருகிறேன்...



தொடரும் உங்களது ஆதரவுக்கு எனது நன்றி...



மிக்க அன்புடன்



மோ.கணேசன்,

நிறுவனர், நிர்வாக இயக்குநர்,

வாலு டிவி



#வாலு_டிவி #vaalu_tv #vaalutv



Monday, September 21, 2020

பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமா?

 


இந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதை எனது அண்ணனுக்காக நான் எழுதியது... 

இந்த நிழற்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கவிதையின் வரிகளில் 1,3,5,7,9 ஆகிய வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தநாள் கொண்டாடும் எனது அண்ணனின் பெயர் வரும்...

உங்களுக்கும், உங்களது அன்பில் நிறைந்தவர்களுக்கும் இதுபோன்று அவர்களது பெயரைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமென்றால்... தாராளமாக 9600045295 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்க... கவிதைக்கும்... வடிவமைப்புக்கும் கட்டணம் உண்டு...

இப்படி ஒரு வாழ்த்தினை உங்களின் அன்பானவர்களுக்கு கொடுக்க விரும்பினால் என்னை அணுகலாம்... சுயதொழில் செய்ய விரும்பும் எனக்கு இப்படியும் நீங்கள் எனக்கு பணி வழங்கலாம்...

மிக்க அன்புடன்

மோகனன்
moganan@gmail.com


எழுத்து வடிவில் இதே அந்தக் கவிதை

மோனத்தில் உழலும் இப்பூவுலகில் இந்நாள் ஓர்

மறவாத திருநாளனது நம்முடைய குடும்பத்திற்கு!

வேலும் மயிலும் துணையான வள்ளியம்மைக்கும்

வீரத்தின் வித்தான மோகன் ராஜிக்கும் பிறந்து

லுலுலுவாயென தாலாட்டுப் பாட வைத்தாய்!

தளிர் நடை பயின்று பெற்றோரை மகிழவைத்தாய்!

ளமளவென வளர்ந்து தச்சுப் பணியில் சிறந்து

குடும்பம் குழவியென சமூகத்தில் உயர்ந்தாய்!

ணிலவினைப்போல  உன் வாழ்வில் துன்பம் தேய்ந்து

நன்மைகள் வளர நீ பிறந்த இந்நாளில் வாழ்த்துகிறோம்!





Tuesday, August 13, 2019

உடல் உறுப்பு தானம்! - காதல் கவிதை

"தோழரே...
இன்று உடல் உறுப்புகள் 
தான தினம்!
உங்கள் உறுப்புகளை
தானம் தாருங்கள்!"
என்று கேட்ட தன்னார்வலரிடம்
தாராளமாகத் தருகிறேன்!
உடலில் உள்ள
அனைத்தையும் தருகிறேன்!
என் இதயத்தைத் தவிர...
என்றேன்!
"ஏன் தோழர்?" என்றவரிடம்
என்னவளை
எப்போது சந்தித்தேனோ
அப்போதே அவளிடம்
என்னிதயத்தை தந்துவிட்டேன்!
இல்லாத ஒன்றை
எப்படித் தருவது தோழா?


(காதலிக்கும் தோழமைகள் இந்த கவிதையை சுட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்..!)




Monday, June 4, 2018

ஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!


அன்று நீ இப்பூமிக்கு வந்த தினத்தை நினைத்துப் பார்க்கிறேனடா அகிலா இன்றும் ஆறாத வடுவாய் ஆகிப்போனது நீயிங்கு அவதரித்த அன்றைய தினம் (1) செஞ்சுடராய் நீ பிறந்திருக்கிறாய் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்த போது மஞ்சள் காமாலை இவனுக்கு - இன்னும் இருபத்திநான்கு மணி நேரம் போகட்டும் (2) உயிர் பிழைப்பானா மாட்டானா என்று உனைப் பரிசோத்தித்த மருத்துவனின் விடை உயிரே போனது போலாயிற்று எனக்கு உன் தந்தையின் கண்களில் கண்ணீர் கடை! (3) உடல் கிழித்து உனை ஈன்ற அன்னைக்கு என்ன பதில்கூறுவேன் என்ன செய்வேன்? உடன்பிறப்பு தம்பியென மகிழ்ந்த உன் அண்ணனுக்கு என்ன பதில் கூறுவேன்? (4) கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க தொண்டைக் குழிக்குள் பெருந்துன்பம் அடைக்க மண்ணுக்கு நீ வாராமலிருந்திருக்கலாம் மகனே என நினைக்க வைத்த நாட்கள் அவை அகிலா! (5) ராச மருத்துவரின் கண் பட்டு கை பட்டு மஞ்சள் பூத்ததெல்லாம் மறைந்து போக பூசை செய்யும் ஐம்பொன் மேனியனாய் அகிலத்தில் வளர்ந்தாய் எங்கள் மகனே! (6) அன்று நீ தாங்கிய மருத்துவ சிகிச்சைகள்தான் உனை இன்று உரமேற்றி இருக்கின்றனவோ என்று நானும் உன் அன்னையும் அடிக்கடி பேசிக் கொள்வோம்..! சிலாகித்துக் கொள்வோம்! (7) குறும்புகளின் மொத்த உருவமாய் இருப்பதும் இரும்பென எதையும் தாங்கும் உறுதியிருப்பதும் அரும்பென மலரும் அழகு புன்னகை இருப்பதும் உனக்கே உனக்கென வாய்த்த சொத்துகளடா! (8) எங்களின் பதிற்றுப்பத்தே, எம்வம்சத்தின் முத்தே அகிலம் ஆண்ட பராந்தக சோழனின் பெயரினில் பங்கு பிரித்து அகிலனென பெயர் சூட்டினோமன்று அகிலமாளும் காலத்தில் வாழ்த்துவோம் நின்று! (9) அன்பு, பண்பு, அறிவு, ஆற்றல், செல்வம், நீளாயுள் ஆளுமை, திறமை, பொறுமை, வாய்மை பெற்று இன்பத்தோடு என்றும் வாழ்க எம்மிளைய மகனே உனக்கென் பத்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து! (10)