ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 16, 2015

மழை தேவையில்லை..?



குளிரூட்டி இன்றி
ஊரெங்குமுள்ள
ஏழைகளின் வீடுகளில்
ஏசி காற்றை
வீசிச் செல்கிறது
இந்த பருவமழை..!
மின்சாரத் தேவையில்லை
அறைகளை மூடத் தேவையில்லை!

ஊரெங்கும் நிறுவப்பட்டிருக்கும்
உத்தமர் சிலைகளுக்கு
உள்ளூர கொண்டாட்டம்
கடும் மழையில் குளித்தும்
கரையாமல்
கம்பீரமாய் நிற்கிறோமென்று…
நீரிங்கு வீணில்லை..!
காக்கை எச்சங்கள் நிலைப்பதில்லை!

பூமிப்பெண்ணிற்கு
மனிதன் ஏற்படுத்திய
மாசுகளை
பெருமழை எனும் பெயரால்
வானமகன் வாரி வீசி
கழுவுகின்றான்…
சோப்பு இங்கு தேவையில்லை
துவட்டத் துண்டு தேவையில்லை!

தண்ணியின்றி தவிக்கும்
தாவரங்களுக்கு
தாங்காத மகிழ்ச்சி..!
நீர் குடிக்க
ஆழ வேர் பரப்பி
மண்ணோடு உறவாடுகின்றன..!
வான்மழை தன்னை
வாஞ்சையோடு தழுவுகின்றன!
செயற்கை உரம் தேவையில்லை
செயற்கை நீர் தேவையில்லை..!

ஆனால் -
ஏரி குளங்களை
ஆக்கிரமிக்கும் ஜந்துகளுக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளை
உருவாக்கும் மாக்களுக்கும்
பெருமழை தேவையில்லை
அடைமழை தேவையில்லை
அழிவினை செய்யும்
அரக்கர்களுக்கு எதுவுமே தேவையில்லை…

தேவையில்லை என்பதால்தான்
எல்லாவற்றையும்
அழித்தெடுத்துச் செல்கிறது
அடைமழையால் உருவான பெருவெள்ளம்!
புரட்டி எடுத்துச் செல்கிறது
பெரும் புயல் வெள்ளம்!
மூழ்க வைத்துக் கொள்கிறது
சிறு மழைத்துளிகளால்
உருவான மா வெள்ளம்…
இயற்கையை நேசி…
அதுவே நம்மை காப்பாற்றும்..!




2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அருமையான கவிதை... படித்து மகிழ்ந்தேன்.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகனன் said...

நன்றி ரூபன்...

அன்புக்கு தலைவணங்குகிறேன்...