ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, April 11, 2011

நவீன வெள்ளைக்காரன்..! - தேர்தல் சிறப்புக் கவிதை


தன்னை விற்று
பிழைப்பு நடத்தும்
வேசி கூட
ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே
காசு கொடுத்தவனுக்கு
அடிமையாக இருக்கிறாள்..!
ஒர் ஓட்டுக்காக
உன்னை விற்றால்
ஐந்து ஆண்டுகளுக்கு
நீ அடிமையாகப் போவது
மட்டுமின்றி...
அன்னை பாரதத்தையும்
ஊழல்வாதிகளிடம்
அடிமையாக்கி விடுவாய்..!
அரசியல் கொள்ளைக்காரர்களின்
ஓட்டுக்காக விலை போனால்
தாய்நாட்டினை அடிமைப் படுத்தும்
நவீன வெள்ளைக்காரனாகிவிடுவாய்..!
உன்னை விற்காமல்
உண்மையாய் ஓட்டளி...
ஒழுங்கான ஆட்சிக்கு
ஒழுக்கமாய் வாய்ப்பளி..!

(இதையும் படிங்க: அரசியல்வாதியின் வேண்டுதல்..!)

(வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி ஜனநாயகக் கடமை... ஓட்டிற்காக உங்களை விற்காமல், கம்பீரமாக செல்லுங்கள்...கண்ணியமாய் வாக்களியுங்கள்..!)




Saturday, April 9, 2011

அண்ணா ஹசாரேவிற்கு..! - சிறப்புக் கவிதை



அண்ணலின் வழி நின்று
அரசினை எதிர்த்து
அஹிம்சையின் வழி நின்று
அரசினை அசைத்த
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

அடிதடி செய்யாமல்
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
பேருந்தைக் கொளுத்தாமல்
பெட்டிக் கடைகளை நொறுக்காமல்
ரயில்களை நிறுத்தாமல்
அமைதியின் வழி நின்று வென்ற
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

தாங்கள் ஊரறிந்த
சினிமா பிரபலம் இல்லை
தாங்கள் உலகறிந்த
விளையாட்டு வீரரும் இல்லை...
காந்தியவாதியாய் இருந்தும்
பிரபலமாகவில்லை...
121 கோடி மக்களுக்காக
உங்கள் ஒருவரை
வருத்திக்கொண்டதால்
எங்களின் மனதில் பிரபலமான
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

தலைகுனிந்து நின்ற இந்தியனை
அவன் தரணியே ஆண்டவன் என்றாலும்
தலைநிமிர்ந்து கேள்வி கேட்கும்
தகவலறியும் உரிமைச் சட்டம்தனை
தாய்நாட்டில் நடைபயில வைத்த
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

பலகோடி உயிர்கள் ஊழலின்றி வாழ
தன்னுடலை வருத்திக் கொண்டு
தன்னாவியைக் கரைத்துக் கொண்டு
உலகத்துப் பார்வையை
உண்மையின் வசம் திருப்பிய 
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

ஊழல் இங்கே இருக்கும் வரை
ஏற்றத் தாழ்வுகள் நிலைத்திருக்கும்
ஏழைகள் வாழ்வு பழித்திருக்குமென அறிந்து
ஊழலை இங்கே ஒழித்தெடுக்க
எவருக்கும் திரணியில்லையென அறிந்து
எழுபத்திமூன்று வயதினிலும்
இளைஞனைப் போல செயல்பட்டு
அஹிம்சையால் வென்ற
அண்ணா ஹசாரேவிற்கு
அடியவனின் தலை வணக்கம்..!

ஏழைகள் சிரிப்பதுமில்லை...
ஆதலால் இங்கே
ஏழையின் சிரிப்பினில்
எவனையும் காணமுடிவதுமில்லை...
தங்களின் சிரிப்பினில்
வெற்றியின் மமதையில்லை...
121 கோடி இந்தியக் குழந்தைகளின்
சிரிப்பாகவே காணுகிறேன் ஐயா..!
உன் வழியைப் பின்பற்றி
என் இளைய சமுதாயம் வளரும்
இந்தியா ஒரு நாள் மாறும்..!

ஊழலுக்கெதிரான ஒரு சிறு தீப்பொறி
இன்றொரு தீபமாய் மாறியது
உங்களால்தான்..!
நாளை அது தீப்பந்தமாவதும்
தீச்சுடும் எரிமலையாவதும்
உங்களால்தான் ஐயா...
அண்ணலின் இளவலே நீர் வாழி..! 
நின் தேசப்பற்று வாழி..!
இவர் வழி நடந்திட இந்தியாவே வா நீ..!

(அண்ணலின் இளவலுக்கு கிடைத்த இவ்வெற்றி, சத்தியத்திற்கும் அஹிம்சைக்கும் கிடைத்த வெற்றி...!)





Friday, April 8, 2011

அங்கே ஓர் ஆன்மா..! - அண்ணா ஹசாரேவுக்காக..!



நியாயவிலைக் கடைகளில்
நிற்பதை விட
ஸ்டேடியத்தின் வாசலில்
அடங்காக் கூட்டம்
ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்க..!

அடிதடியில் ஆரம்பித்து
அரைவட்ட சுவரைத் தள்ளியது...
போலிஸ் தடியடியை
வாங்கிய பின்னரும்
வரிசையில் நின்று
டிக்கெட்டை வாங்கிப் போனது
இந்திய சமுதாயம்..!

ஐபிஎல் போட்டிகள்
ஆரம்பித்து விட்டால் போதும்
சாதி, மொழி, இனம் கடந்து
ஆதரவுக் கரங்கள் பெருகும்
ஆசைகள் கண்களில் விரியும்...
இந்திய ஒற்றுமைகள் அனைத்தும்
ஒவ்வொரு இந்தியனின்
கன்னத்தில் கொடியாய் விரியும்...
உற்சாக வசனங்கள் கைகளில் மின்னும்..!

ஒவ்வொரு அடிக்கும்
உற்சாக குரல்கள் விண்ணை முட்டும்!
திரை உலக கனவான்களும்
தங்கள் பணப்பங்குக்கு
தத்தமது அணிகளை
உற்சாகப் படுத்தும் சாக்கில்
ஊரைச் சேர்ப்பார்கள்..!

ஊழலின் ஊற்றுக் கண்ணை
அழித்தெடுக்க
அங்கே ஓர் ஆன்மா
தன் உயிரை
காற்றில் கரைத்துக் கொண்டிருக்க...
அரசாங்கம் கை கட்டி வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க...
அவருக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆளில்லை
அவர் வழியில் போராட
இங்கே எவனுக்கும் திரணியில்லை..!

ஊழலுக்கெதிராக நாம் திரளுவதா?
சே... சே... நமக்கு வேற
வேலை வெட்டி இல்லையா என்ன?
ஐபிஎல் போட்டி இருக்கு...
தலைவரோட சினிமா படமிருக்கு...
இரவு விடுதி நடனமிருக்கு...
தாகம் தீர்க்க டாஸ்மாக்கிருக்கு...
ஏய்த்துப் பிழைக்க தேர்தலிருக்கு...
இதென்ன உண்ணாவிரதப் பேச்சு...
போ.. போ... போ..!

அட என்னே ஒரு ஒற்றுமை...
என்னே ஒரு பண்பாடு...
வாழ்க பாரத மக்கள்...
வளர்க பாரத சமுதாயம்..!
போங்கடாங்க...
நீங்களும் உங்க நாட்டுப் பற்றும்..!

(அண்ணா ஹசாரேவின் போராட்டம் வெற்றி பெற தோள் கொடுப்போம் வாரீர்..!)




Thursday, April 7, 2011

உன் இதழ்க்கொடியில்..!



கொடியின் இடையில் மலர்கள்
பூக்கும் போதுதான்
மனதில் மகிழ்ச்சி நிறையும்...
அவைகள் உதிரும் போது
என்மனதில் துன்பம் துண்டை விரிக்கும்..!
இதற்கு மாறாக
உன் இதழ்க்கொடியில்
புன்னகை பூ பூத்தாலும் சரி...
உதிர்ந்தாலும் சரி...
என் மனதில் மகிழ்ச்சி நிறையும்..!

(முதன் முதலாக நான் நடித்த டாகுமெண்டரி படம்..! - பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க)




Wednesday, April 6, 2011

போரட்டம் மிகுந்த உலகத்தில்..!


அன்னையின் கருவினில்
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!

அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!

அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!

அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்

போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!

எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!




Tuesday, April 5, 2011

உன்னைப் பாதுகாக்கும்..!



நீ அழகிய முத்து
போன்று இருப்பதால்தான்
பெண்ணே…
உன்னைப் பாதுகாக்கும்
சிப்பியாக
நானிருக்க வேண்டுமென்று
ஆசைப்படுகிறேன்..!