ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 2, 2009

உன் மூடிய இமைக்குள்..!



உன் மூடிய இமைக்குள்
கருவிழியாய் நான்..!
கார்மேகக் கூந்தலில்
மணக்கும் மல்லிகையாய் நான்..!
தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்
விழும் குழியாய் நான்..!
உன் சந்திர வடிவ நெற்றியில்
சூரியக் குங்குமமாய் நான்..!

உன் வெண்சங்குக் கழுத்தில்
பொன் மஞ்சள் நாணலாய் நான்..!
மூடி மறைத்த உன்
மார்புகளுக்கிடையில்
இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!
உன் பூந்தளிர்க் கரங்களில்
ஒலிக்கும் வளையல்களாய் நான்..!

கொழுத்த உன் வயிற்றினில்
கொப்பூழாய் நான்..!
உன் வாழைத் தண்டு கால்களில்
ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!
மெல்லிய உன் கால் விரல்களில்
ஒளிரும் மெட்டியாய் நான்..!

இப்படி உன்னுள் அனைத்தும்
நானாக விரும்புகிறேன்..!
உன்னுள்ளும் உணர்ச்சிகள்
உண்டென்பதை நானறிவேன்..!
வாழ்க்கைக்காக நீ காத்திருந்தது
போதும் கண்ணே..!
உனக்காக ஒரு வாழ்க்கையே
இங்கு காத்திருக்கிறது..!

நீ விதவையெனில் உனை
நான் காதலிக்கலாகாதோ..!
சகியே… சமூகம் ஒரு குப்பையடி
அது சாத்திரங்களின் நாற்றமடி..!
போதும் உனது பொய் வாழ்க்கையடி..!

உன் விதவைக் கோலத்தைத் துறந்திடடி..!
உன் பழைய வாழ்வை மறந்திடடி..!
என் உணர்வுகளை நீயும் மதித்திடடி..!
என்னுள் இரண்டறக் கலந்திடடி..!



4 comments:

Unknown said...

தங்களின் கவிதை காமம் கலந்த காதலை வெளிப்படுத்துகிறது நண்பரே, மிகவும் அழகான வரிகள்

மோகனன் said...

அன்பான ஸ்ரீதர் அவர்களுக்கு...

இது நான் எழுதிய போது..என் மனத்துள் எந்தவிதமான காமமும் கலந்திருக்கவில்லை...

நான் நேசித்த அந்த தேவதை மீது உண்மையான அன்பு கொண்டு எழுதிய கவிதை இது... தாங்கள் இங்கு குறிப்பிட்டது சற்றே என் மனதை வருத்துகிறது...

உணர்ச்சிகள் என்பதை தவறாக எண்ணிக் கொண்டீர்களோ..? (என்னவள் பிறரைப் போல் நெற்றியில் திலகமிட ஆசைப் பட்டாள்...பூ வைக்க ஆசைப்பட்டால்.. வளையலிட ஆசைப்பட்டாள்... ஆனால் அவள் விதவை என்பதால் அந்த உணர்ச்சிகளை அவள் தன்னுள்ளே புதைத்து வைத்திருந்தாள்...)இல்லை என் வரிகள் அப்படி உம்மை சிந்திக்க வைத்து விட்டதோ..?

எதுவாக இருப்பினும்... படைப்பு என்பது நானாவித விமர்சனங்களுக்கு உட்பட்டால்தான் அப்படைப்பு முழுமை பெறும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்...

தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் வருத்தம் கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க ஸ்ரீதர்...

கலைச்செல்வி said...

நண்பரெ

இப்படி உன்னுள் அனைத்தும்
நானாக விரும்புகிறேன்..!

நீ விதவையெனில் உனை
நான் காதலிக்கலாகாதோ..!

மிகவும் அழகான வரிகள்.

உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை.

விதவையை விரும்பும் உள்ளத்திட்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.

மோகனன் said...

அன்பு நண்பர் கலைபிரபு அவர்களுக்கு...

என் உணர்வை புரிந்து கொண்டமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழரே..!

தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க