ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, September 30, 2009

ஹைக்கூ அல்ல குறுங்கவிதை..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான திருவள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான் இந்த ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ'. வித்தியாசம் என்னவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..!  இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன். மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் விவாதிப்போம்...

இனி எனது குறுங் கவிதைகள்...





--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--



4 comments:

Ramesh said...

KURUM KAVITHAIGAL ANAITHU ARUMAI

மோகனன் said...

மிகவும் நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

தமிழ் யாளி said...

இன்னும் ஆழமாக
உள்வாங்கி ஆழமாக
சுவாசித்து எழுதுங்கள்
கவிகள் மேலோட்டமாக
இருக்கின்றது

மோகனன் said...

நன்றி தோழரே...

இவைகள் எல்லாம் என் இளம்பிராயத்து கவிதைகள்... நான் முதன் முதலாக எழுத ஆரம்பித்த போது தோன்றிய கவிதைகள்...

அதை அப்போது எப்படி எழுதி இருந்தேனோ... அப்படியே இங்கும் பதிவிட்டுள்ளேன்...

தாங்கள் சொன்னது போல் இனி செய்கிறேன்...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் இனிய நன்றிகள்..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!