பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…
மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.
என்னுடைய அத்தனை
கணக்குகளும் நொடிப்பொழுதில்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!
ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்...
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!
எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
'அப்பா..! இதோ என் சம்பளம்...
உன் சம்பளம் எங்கே..?'
அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!
No comments:
Post a Comment